Saturday, December 22, 2012

தகவல்கள்-3

தகவல்கள்-3

மறதி!
 வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
 அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
 திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
 நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
 ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
 -நெ.இராமன், சென்னை.

 பண்பு!
 ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு சற்று வருத்தமாகப் போய்விட்டது.
 ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
 பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
 அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
 பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
 -என்.காளிதாஸ், சிதம்பரம்.

 மை!
 ஒருசமயம் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ""எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
 நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
 எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் - வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
 இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.
 -ஆச்சா, செவல்குளம்.

No comments:

Post a Comment