Wednesday, August 15, 2012

சிறந்த அறிவுரைகள்

சிறந்த அறிவுரைகள்

First Published : 12 Aug 2012 04:39:00 PM IST 


வில்லியம் ட்யூரண்ட் ஒரு சிறந்த அமெரிக்க  சிந்தனையாளர். அவர்தம் பேரப் பிள்ளைகளுக்கு எழுதிய பத்து அறிவுரைகள் இவை. எல்லாக் குழந்தைகளுக்கும்ஏற்ற அறிவுரைகளாக இவை இருப்பதுதான் சிறப்பு. •உடலையும் உள்ளத்தையும் துப்புரவாக்கிக் கொண்டபின் உன் யோசனையைத் தொடங்கு. உன் குளியலறையை நீயே சுத்தம் செய்து நன்றாக வைத்துக் கொள்.  •காலையில் எழுந்ததும் உன் அறையைவிட்டு வெளியே வரும்போது உன்னுடைய அழுக்கு உடைகளைத் துவைப்பதற்காகத் தனிக் கூடையில் போட மறக்காதே. •நன்றாக ஆடை உடுத்திக் கொள். புது நபர்கள் நம்மை நெருங்கிப் பழகி அறிந்து கொள்வதற்கு முன்பு நம் உடையைப் பார்த்துத்தான் நம் தரத்தை எடை போடுகிறார்கள். மதிப்புள்ள பிரமுகர்களின் கருத்து நம் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் வகை செய்கிறது.  •தினமும் குடும்பத்திலோ வெளியிலோ மற்றவர்களுடன் பழகத் தொடங்கும்போது புன்சிரிப்போடு இரு; அப்படியே பழகு. உன் குறைகளைக் குறைவாகவும் உன் நிறைகளை அதிகமாகவும் எண்ணி மகிழ்ச்சி கொள்.  •மற்றவர் பேசும்போது நீ குறுக்கே பேசாதே; உனக்குப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போது பேசு; பணிவாகவே பேசு. வம்பு வளர்க்கும் வாக்குவாதத்தில் இறங்காதே. உண்மையை ஏற்றுக் கொள்,  •எல்லோரிடமும் பண்போடு கண்ணியமாகப் பழகு. விட்டுக் கொடுக்கவும் உதவவும் தயாராக இரு. முக்கியமாக உன் விரோதிகளிடத்தில் இவற்றைத் தவறாது மேற்கொள்.  •பண்படாத பயனில்லாத தீங்கு தரும் சொல், செயல், காட்சிகளை மிக மிகக் குறைவாகவே அணுகு. உன் மூளைக்கு ஏற்றபடிதான் உன் புத்தி அமையும். உன் மூளையைக் குப்பைத்தொட்டியாக்கிக் கொள்ளாதே.  •தினமும் ஏதாவது நல்ல விஷயத்தைப் படித்துக் கொண்டு வா. இப்படியே படித்துப் படித்து முடிந்தவரையில் கல்வியறிவை வளர்த்துக் கொண்டே இரு.  •வெளிக்குப் பணிவுள்ளவனாகவும் உள்ளுக்குள் தன்மானம் நிரம்பியவனாகவும் இரு. பணிவினால் அக்கம்பக்கத்தாரிடமும் புதியவர்களிடமும் நல்ல பெயர் எடுப்பது எளிது.  •கடுமையான வழியும் வேண்டாம். எளிமையான வழியும் வேண்டாம். நடுத்தர வழியில்  முன்னேறு. வெற்றிக்கு எளிய வழி இதுதான்.