Saturday, November 17, 2012

உலகின் தலைசிறந்த ஆசிரியை!

தட்டச்சுப்பிழையின் காரணமாக எலன் கில்லரின் ஆசிரியர் ஆன்சலிவன் ௭ ஆம் அகவையில் காலமானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. 70  (௧௮௬௬-௧௯௩௬) எனத் திருத்துங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

உலகின் தலைசிறந்த ஆசிரியை!

First Published : 16 November 2012 04:23 PM IST
உடல் குறைபாடுகள் எதுவும் இல்லாத ஒருவருக்குப் பாடம் புகட்டுவதே பெரிய விஷயமாகும். அதிலும் கண்பார்வை இழந்த, காது கேட்காத மாற்றுத் திறனாளி ஒருவருக்குப் பாடம் கற்பிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகும்.
அத்தகைய சவாலைத் திறம்பட எதிர்கொண்டு தன் மாணவியின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியவர் "ஆன் சலிவன்' என்ற ஆசிரியப் பெருந்தகை ஆவார்.
ஆம்! ஹெலன் கெல்லரின் வழிகாட்டியாக விளங்கிய ஆன் சலிவன்தான்!
ஆன் சலிவன் 1866-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தார்.
இவரது தந்தை ஒரு மிகப் பெரிய குடிகாரராகவும் தாயார் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்ட நோயாளியாகவும் இருந்தனர். ஆகவே, ஆன் சலிவனின் இளமைப் பருவம் மிகவும் துயரம் நிறைந்ததாக இருந்தது. தனது ஐந்தாவது வயதில் "டிரக்கோமா' என்னும் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் சிறிது சிறிதாகத் தன் பார்வையை இழந்தார்.
ஏழு வயதில் தன் தாயை இழந்த இவர், தனது தந்தை கைவிட்டதால், தனது ஐந்து வயது சகோதரன் ஒருவனுடன் ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் அடைக்கலம் புகுந்தார்.
ஏற்கெனவே, எலும்புருக்கி நோயால் பீடிக்கப்பட்டிருந்த அந்த இளைய சகோதரனும் இறந்து போனான்.
பாஸ்டனில் உள்ள "பெர்க்கின்சன்' என்னும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் தமது 14-வது வயதில் சேர்ந்தார். துயரங்களும் வறுமையும் வாட்டிய போதும் தனது அயராத முயற்சியினால் கல்வியைத் திறம்படக் கற்றார்.
தொண்டு நிறுவனங்களின் உதவியால் சிற்சில அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் இவருக்குப் பார்வை குறைந்த அளவு கிட்டியது. சைகை மொழியில்  வல்லுநர் ஆனார். இவர் தனது படிப்பை முடிக்கும் தருணத்தில் ஹெலன் கெல்லரின் பெற்றோர் தம் மகளுக்குக் கல்வி புகட்ட வருமாறு அழைத்தனர்.
தாழ்வு மனப்பான்மையாலும் இயலாமையாலும் மிகவும் கரடுமுரடான குணத்தைக் கொண்டிருந்த ஹெலன் கெல்லரை சமாளிப்பது பெற்றோர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. ஓர் ஆசிரியையின் கண்காணிப்பில் இருந்தால் ஓரளவு நல்ல பழக்கவழக்கங்களையாவது ஹெலன் கற்றுக் கொள்வார் என எண்ணித்தான் ஆன் சலிவனை அணுகினர்.
ஆக்ரோஷமும் கோபமும் நிறைந்த ஹெலனை சமாளிப்பது மிகப் பெரும் போராட்டமாக இருந்தது. அளவுகடந்த பொறுமையோடும் அன்போடும் தனது மாணவியை நெறிப்படுத்தினார் ஆன்.
ஹெலனுக்கு அவர் முதலில் கற்பித்த வார்த்தை என்ன தெரியுமா? "வாட்டர்'-ஆம் தண்ணீர்தான்.
அதுவரை இத்தகைய அணுகுமுறையைத் தன் பெற்றோரிடம் கண்டிராத ஹெலன், தன் ஆசிரியரை மதிக்கத் தொடங்கினார். ஆன் சலிவன் துணையுடன் ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து அறிவியல், சமூகவியல் மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கற்றார்.
ஹெலன் கெல்லரின் வாழ்வில் ஒளியேற்றிய ஆன் சலிவனை ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகமும் ரூஸ்வெல்ட் நினைவு ஃபவுண்டேஷனும் பெருமைப்படுத்தின.
ஆன் சலிவன், தமது 70- ஆவது வயதில் நியூயார்க்கில் காலமானார். அவர் மறைந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும்வண்ணம், ராட்கிளிஃப் கல்லூரியில் ஒரு செயற்கை நீரூற்று அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவ்விழாவில் அஞ்சலி செலுத்த வந்த ஹெலன் கெல்லர் கூறிய வார்த்தை எது தெரியுமா? "வாட்டர்' - ஆம் தண்ணீர்.
ஹெலன் கெல்லரை நெறிப்படுத்தி வாழ்வளித்த உலகின் தலைசிறந்த ஆசிரியை ஆன் சலிவனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment