Friday, January 11, 2013

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல்...



உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில் விவசாயத்திற்குத் துணை புரிந்த கதிரவன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப் பொங்கல் அமைந்துள்ளது.
உழவுத் தொழிலுக்கு மிகவும் அவசியமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. ஆகவே அவைகளைத் தக்க முறையில் பராமரித்துப் போற்ற வேண்டும் என்பதால் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
கால்நடைகள் மக்களின் செல்வங்களாக விளங்குகின்றன. மாடு என்னும் சொல்லுக்கே செல்வம் என்றும் பொருள் உண்டு.
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை
என்னும் திருவள்ளுவர் அருளிய தமிழ்மறையாம் திருக்குறளில் 'மாடு' என்னும் சொல் "செல்வம்' என்னும் பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.
எனவே நாட்டு வளத்தை மனத்தில் வைத்தே கால்நடைச் செல்வங்களைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நாளில் கால்நடைகள் குறித்த தமிழ்ப் பழமொழிகளையும் உலக நாடுகளின் பார்வையில் கால்நடைகள் குறித்த கருத்துகளையும் பார்ப்போம்.
• எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும்.

• அருங்காட்டை விட்டவனும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான்.

• மாட்டுக்கு மேய்ப்பும் குதிரைக்குத்
தேய்ப்பும்.

• உள்ளூர் மருமகனும் உழுகிற கிடாவும் சரி.

• மாட்டை நடையில் பார்; ஆட்டைக் கிடையில் பார்.

• உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.

• அடியாத மாடு படியாது.

• உழுத மாட்டை முகத்தில் அடிக்கலாமா?

• உழவு மறந்தால் எருது படுக்கும்.

• வீட்டுக்குச் செல்வம் மாடு; தோட்டத்துக்குச் செல்வம் முருங்கை.

• கறக்கிற பசுவையும் கைக்குழந்தையையும் கண்ணாகப் பார்க்க வேண்டும்.

• கறவை உள்ளவன் விருந்துக்கு அஞ்சான்.

• கறவை மாடு கண்ணுக்குச் சமம்.

• பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்ளு; தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு.

• பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்; ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்.

• இளங்கன்று பயமறியாது.

• எருமைக் கன்று அருமைக் கன்று.

• முன்னே ஆட்டைப் பிடி; பின்னே மாட்டைப் பிடி.

• கண்டதெல்லாம் ஓடித் தின்னும் ஆடு. நின்று நின்று மேய்ந்து போகும் மாடு.

• உலக நாடுகள் பார்வையில் கால்நடை பழமொழிகள்
 
• பால் கறக்கும் முன் பசுவைத் தட்டிக் கொடு. - ஆப்ரிக்கா.

• பாலும் முட்டையும் வேண்டுமென்றால் பசுவையும் கோழியையும் துன்புறுத்தக் கூடாது. - திபெத்.

• மாடு தொலைத்தவனுக்கு மணியோசை கேட்டுக் கொண்டே இருக்கும். - ஸ்பெயின்

தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.


No comments:

Post a Comment