Saturday, January 5, 2013

தகவல்கள்-3

தகவல்கள்-3

அகிம்சை கற்பித்த குறள்!
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இவரை மகாத்மா காந்தியடிகள் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' அகிம்சை தத்துவத்தின் பிரதிபலிப்பே. அத்துடன் அவர் எழுதிய "அன்னா கரீனா' என்ற நூலும் அகிம்சைத் தத்துவத்தின் விளக்கமே.
 காந்தியடிகள் ஒருமுறை டால்ஸ்டாயைச் சந்தித்தபோது, ""அகிம்சையை மையப்படுத்தி நவீனங்கள் படைத்துள்ளீர்களே, அது எப்படி?'' என்று வினவினார்.
 அதற்கு டால்ஸ்டாய் சொன்ன பதில் -
 ""உங்கள் நாட்டில் தோன்றிய திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துத்தான் அகிம்சை பற்றி நான் தெரிந்து கொண்டேன்!''
 - அ.சா.குருசாமி, செவல்குளம்.
 
 முதல் வந்த நினைவு
 பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பி.சி.ராய், தம்முடைய எண்பதாவது பிறந்த நாளின்போது தம்மை வாழ்த்த வந்த பற்பல அரசியல் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர் டாக்டர் ராய் அவர்களிடம், ""இந்தப் பிறந்த நாளின்போது யாருடைய நினைவு முதலில் வந்தது?'' என்று கேட்டார்.
 அதற்கு ராய் அவர்கள், ""சுதந்திரப் போராட்ட காலங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் காந்தி அடிகள், பண்டித நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்களுடைய நினைவுகள் எல்லாம் எனக்கு வராமல், எளிய உருவமுடன் ஏழை மக்களின் நலனில் அக்கறையும் கொண்டு சதாசர்வகாலமும் தொண்டுசெய்துவரும் அன்னை தெரசா அவர்களின் கருணை நிரம்பிய முகம்தான் என் நினைவில் வருகிறது...'' என்று ஒளிவுமறைவின்றிக் கூறியது, அனைவருடைய நெஞ்சத்தையும் நெகிழவைத்தது.
 - ஜி.பென்னி, விழுப்புரம்.

 நேர்மைக்கு இலக்கணம்!
 காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம். ராஜாஜி எதிரணியில் இருக்கிறார். மாம்பலம் சி.ஐ.டி. நகரில் "ராஜாஜி சேவா சங்கம்' என்ற அமைப்பைச் சார்ந்த கட்டடம் கட்டியிருந்தார்கள். ஆனால் சி.ஐ.டி. நிறுவனத்தினர் அந்தக் கட்டடம் தங்களுடைய விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டார்கள். இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரியவந்தது. ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டுகொள்ளமாட்டார் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் காமராசர், சி.ஐ.டி. நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டடத்தைப் புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்தரவு பிறப்பித்தார். அதேபோல சி.ஐ.டி. நிறுவனத்தினர் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தனர். இப்போதும் அந்தக் கட்டடம் மாம்பலம் சி.ஐ.டி. நகரில் இருக்கிறது. பெருந்தலைவரின் நேர்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
 (ஆதாரம்: இளசை சுந்தரம் எழுதிய "காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து.)
 - என். கணேசன், வேலூர்.

No comments:

Post a Comment