Saturday, November 5, 2011

புதிய விடுகதைகள்

Blog post image #1
கல்வி, விளையாட்டுக்குப் பிறகு கதை சொல்வது. கேட்பது என்பது பழங்காலப் பழக்கம். இப்படி வயதானவர்கள் இளம் பிள்ளைகளுக்குத் தங்கள் அனுபவத்தில் கற்ற பழங்கதைகள், பழமொழிகள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள் எனச் சொல்லி வளர்ப்பது பிள்ளைகளிடத்திலே பண்பாட்டையும் ஒழுக்கத்தையும், பெரியவர்களை மதிக்கும் பண்புகளையும் உருவாக உதவும்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் காலையில் ஏழு மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் மாலை ஐந்து மணிக்குத்தான் வருகிறார்கள். வந்தவுடனே சாப்பிடுகிறார்களோ இல்லையோ அடுத்த பள்ளியான டியூசன் சென்டருக்குப் படையெடுக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு விளையாட நேரம் இருப்பதில்லை. பாரதி பாடினானே ‘மாலை முழும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா’ என்று. அதில் மாலையே இவர்களுக்கு இல்லாமல் போனபோது விளையாட்டுக்கு எங்கே நேரம்?
விழுந்து விழுந்து படிக்கிறார்கள். எதற்காக? வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பணம் சம்பாதிக்க. ஒரு நல்ல கிளார்க் ஆக உருவாக்க பெற்றோர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் என்ன?
நாட்டில் ஒரு அளவான சம்பள நிர்ணயம் இல்லை என்பதே இதற்குக் காரணம். வெளிநாட்டிலிருந்து கார்ப்பரேட் கம்பெனிகள் இங்கு வந்ததற்குப் பிறகுதான் நாட்டில் இப்படி ஒரு அவலநிலை உருவாகியிருக்கிறது. காரணம். ரூ. பத்தாயிரத்தையே பெரிய சம்பளமாக நினைத்து ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தவர்களிடம் ஐ.டி. நிறுவனங்களில் ரூ. 40 ஆயிரம் 50 ஆயிரம் என கொடுத்ததும் நாட்டின் உயிர்நாடியான விவசாயப் பெருங்குடி மக்களும் தங்கள் பிள்ளையும் நன்கு படித்து இதுமாதிரி நிறுவனங்களில் வேலை செய்து கைநியை சம்பாதிக்க வேண்டும் என நினைக்க வைத்துவிட்டது என்றால் மற்ற தொழில் புரிபவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். இதில் தவறில்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா? அதனால் வாழ்க்கை முறை சரியாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். நம் கலாச்சாரம்தான் மாறிக்கொண்டிருக்கிறது.
ஐ.டி.நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளத்தைத் தவிர வேறு எந்தச் சலுகையும் கிடையாது. எவ்வளவு நாள் வேலை செய்திருந்தாலும் தற்காலிகப் பணியாளர்களாகத்தான் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அமெரிக்காவில் ஏற்பட்டதைப்போல பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது கம்பெனியை இழுத்து மூடிவிடுவார்கள். பணியாளர்களின் நிலை அதோகதிதான்.
எல்லாரும் ஒரே துறை, ஒரே சம்பளத்தைக் குறிவைத்தே படிக்க வைக்கிறார்கள். பிள்ளைகளும் பெற்றோர்களின் அழுத்தத்தின் காரணமாகத் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறார்கள். (மூளையில் அவ்வளவும் பதிவாகாது.) அதிலும் பல கான்வென்ட்களில் பெற்றோர்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று அவர்களைக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிகமான பாடங்களைக் கொடுத்து அதைச் சொல்லிக் கொடுங்கள், இதைச் சொல்லிக்கொடுங்கள் என்று அழுத்தத்தைப் பெற்றோர்களின் மேல் போட்டுவிடுகிறார்கள். அதனால்தான் பிள்ளைகளைக் கல்வி ரேஸில் ஓடவிடுகிறார்கள் பெற்றோர்கள்.
இதனால் குடும்ப உறவினர்களுடன் அமர்ந்து பேசவோ, உன்னத உறவான பாட்டன், பாட்டிகளிடம் பழங்கதைகளைக் கேட்கவோ, மனம்விட்டு பேசவோ, கற்பனைகளை (கிரியேசன்) வளர்த்துக்கொள்ளவோ அவர்களுக்கு நேரமும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. இப்படியே போனால் வருங்காலத்தில் மனித உறவுகள் என்பது இயந்திரத்தனமாக மாறிவிடும். நம் தாய், தந்தை, அண்ணன், அக்கா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி என்ற உன்னதமான உறவுகள் போய் எல்லாரும் ஒரு உருப்படிகளாகப் போய்விடக்கூடும் என்ற அச்ச உணர்வு பல பேர்களிடம் காணப்படுவது நிஜம்.
ஆயிரம்தான் ஏட்டிலே படித்தாலும் நம் குடும்ப உறவினர்களின் மூலம் சொல்லப்படுகிற, கேட்கப்படுகிற சரித்திரம், பூகோளம், உண்மைச் சம்பவங்கள் போல் பிள்ளைகள் மனதில் ஆழப்பதிவதில்லை. ஆன்மிக யோகி விவேகானந்தர் கூட தன் தாயிடம் பக்திக் கதைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் பின் பெரிய விவேகி ஆனார். அதேபோல் இன்று தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த செஸ் ஆட்ட வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூட அவர் தாயிடம் செஸ் விளையாட்டு விளையாடி விளையாடித்தான் உலகப் புகழ்பெற்ற செஸ் சேம்பினாக மிளிர்கிறார்.
தொண்டுள்ளம், மனிதநேயம், நம் முன்னோர் பெருமை, இனஉணர்வு, ஒழுக்கம், பற்று, பாசம் உருவாகப் பிள்ளைகளிடம் படிக்கும் காலத்திலேயே கதைகள், நாட்டுப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், பழங்கதைகள், விடுகதைகள் சொல்லி வளர்ப்பது எதிர்காலத்தில் வளமான, வலிமையான, உணர்வான இளைய சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
பழமொழிகள் ஒரு காலத்தோடு நின்று விட்டன. இது படிக்காதவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைத்த சாரத்தைப் பழமொழிகளாகக் கூறிக் கூறி அதைப் பின்வந்த சந்ததிகள் சொல்லிச் சொல்லி நம் பண்பாட்டைப் பறைசாற்றுகின்றன. அதன்பிறகு படித்தவர்கள், அறிஞர்கள் சொல்லி வைத்ததுதான் பொன்மொழிகள். அதுவும் ஒரு கட்டத்திற்குமேல் நின்றுவிட்டன. அதேபோல் விடுகதை என்பது சிந்தனை ஆற்றலைத் தூண்டி அறிவியல் அறிவை வளக்கும். இது அடியோடு மக்கள் புழக்கத்திலிருந்தே போய்விட்டது. முன்பெல்லாம் (சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்) சாதாரணமாகப் பேசும்போதே பழமொழி முத்துக்கள் உதிரும்.
தற்போது அந்தக் குறையைக் களைய கவினில் புதிய விடுகதைகள் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் புதிய விடுகதைகளைப் பதிவு செய்யுங்கள். வெளியிடலாம். முதல் கட்டமாகப் பத்து புதிய விடுகதைகள்.
1. ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் வெட்டிப்போடுவதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
2. இறக்கை இருக்கும் பறவையல்ல, வால் இருக்கும் விலங்கு அல்ல, சக்கரம் இருக்கும் வாகனமல்ல, மிதக்கும் ஓடமல்ல.
அது என்ன?
3. கையடக்கப்பிள்ளை பாடும், பேசும், அளவளாவும்.
அது என்ன?
4. பளபளப்பான். ஆனால் மணம் இல்லான். மாற்றுரு படைப்பான் , வலதை இடதாக்குவான்.
அது என்ன?
5. ரத்தம் குடிக்கும் பாடும் பறவை.
அது என்ன?
6. கடிப்பான், சுமப்பான், பாதுகாப்பான், காத்திருப்பான்.
அது என்ன? 7. இறக்கை உண்டு, பறக்கம் மாட்டான். துயில் எழும்பப்பாடுவான்.
அது என்ன?
8. ஒட்டிப் பிறந்த இரட்டைப்பிறவிகள் இறுக்கிப் பிடிப்பதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
9. மூன்று கால் நண்பன் இடக்கையை அடித்தால் ஓட்டம்பிடிப்பான்.
அது என்ன?
10. ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் தெளிவாய் காட்டுவதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
1. கத்திரிக்கோல்
2. விமானம்
3. செல்போன்
4. கண்ணாடி
5. கொசு
6. செருப்பு
7. கோழி
8. க்ளிஃப்
9. ஆட்டோ
10. மூக்குக் கண்ணாடி


No comments:

Post a Comment