Friday, October 22, 2010

மம்மி

மம்மி என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் போல சிலர் அம்மாவை மம்மி என்று அழைப்பார்கள் அல்லவா, அந்த மம்மிக்கும் இந்த மம்மிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு மம்மி என்று சொல்வது உயிரற்ற உடலைத்தான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் சவம். இந்த மம்மிகள் எகிப்தில் உள்ளன.பிரமிடுகளின் நாடுதான் எகிப்து. அங்குள்ள மிகப் பெரிய பிரமிடுகளைப் பார்த்தால் நாம் வியந்துபோவோம். அவை கட்டப்படுவதற்கு எத்தனைக் காலம் ஆகியிருக்கும்! எத்தனை எத்தனை வேலையாட்கள் இதற்காக உழைத்திருப்பார்கள்! வருடக்கணக்காக பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டவைதான் ஒவ்வொரு பிரமிடும். பிரமிடுகள் என்பது வெறும் கல்லறைகள்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.புராதன எகிப்தின் சக்கரவர்த்திகள்தான் பாரோக்கள். இவர்களின் சவங்களையும், மற்ற ராஜாக்களின் சவங்களையும் பிரமிடுகளில் பாதுகாத்து வைத்தார்கள். அந்த சவங்கள்தான் மம்மிகள்.ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்ட மம்மிகள் இப்போதும் கெட்டுப்போகாமல் இருக்கின்றன. சவ உடல்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கான முறை புராதன எகிப்தியர்களுக்குத் தெரிந்திருந்தது. அழுகச் செய்கின்ற அணுக்களிலிருந்து அவர்கள் சவ உடலைக் காப்பாற்றினார்கள். அதற்காக அவர்கள் "ஆஸ்பல்ட்', "ப்ளாஸம்', எனும் பாதுகாக்கும் பொருள்களை (டழ்ங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ஸ்ங்) பிரயோகப்படுத்தினார்கள். இவை சில ரசாயனப்பொருட்களாகும்.சவ உடலிலிருந்து குடல் முதலிய உறுப்புகளை நீக்கிய பிறகுதான் பிரஸர்வேட்டிவ்களைப் பிரயோகிப்பார்கள். உடல் பக்குவப்படுவதுவரை இப்படிச் செய்வார்கள். பிறகு, எகிப்தின் காவல் தெய்வமான ஒஸீரஸின் முகமூடியை சவ உடலுக்கு அணிவிப்பார்கள். இப்படி பக்குவப்படுத்தப்பட்ட மம்மியை ஒரு மரப்பெட்டியில் வைப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு கல்லறையில் பத்திரமாக அடக்கம் செய்வார்கள்.சவ உடலிலிருந்து எடுத்த குடல் முதலிய பொருட்களை ஒரு கற்பாத்திரத்தில் இட்டு இந்தக் கல்லறையிலேயே அடக்கம் செய்வார்கள். விரைவாக அணுச்சேர்க்கை நடக்கிற குடல்களைக் காப்பாற்றுவதற்கு ரசாயனப் பொருட்களால் இயலாது. அதனால்தான், குடலைத் தனியாகப் பிரிக்கிறார்கள். இப்படி மம்மியாக்கப்பட்ட சவ உடல்கள் எந்த மாற்றமும் இன்றி இப்போதும் நிலைத்திருக்கின்றன.சவ உடல்களை ஏன் இப்படிப் பாதுகாக்கிறார்கள்? மனிதன், மரணத்திற்குப் பின்னும் வாழ்வதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். சவ உடலை சற்றும் சேதமடையாமல் பாதுகாத்தால், அந்த உடலுக்குரியவருக்கு மேல் உலகத்தில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!ஆனால், எல்லா சவ உடல்களையும் இப்படிச் செய்ய மாட்டார்கள். சவ உடலை மம்மியாக மாற்ற நிறையச் செலவு செய்ய வேண்டிவரும். அதனால், ஏழைகளின் சவ உடல்கள் மம்மியாக மாற்றப்படுவதில்லை.சக்கரவர்த்திகளாலும் ராஜாக்களாலும், மேல் உலகில் சேவகர்களும் படைவீரர்களும் இல்லாமல் வாழ முடியுமா? இதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? இறந்த சேவகர்களின், படை வீரர்களின் உருவங்களை, மம்மியைப் பாதுகாத்த கல்லறைக்கருகில் செதுக்கி வைத்தார்கள். அப்படி அவர்களுக்கும் மேல் உலகில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!

No comments:

Post a Comment