Saturday, February 2, 2013

வண்டிருக்கும் பழமா?

வண்டிருக்கும் பழமா?



"காவடிச்சிந்து' அண்ணாமலை ரெட்டியார் தனது இளவயதில் ஒருமுறை ராமநாதபுரம் மன்னரைக் காணச் சென்றார். அப்போது அங்கு மாம்பழக் கவிச்சிங்கக் கவிராயர் இருந்தார். அண்ணாமலை ரெட்டியாரும், கவிராயரும் மட்டுமே இருந்தனர். ஒருவரை மற்றவர் அறிந்திருக்கவில்லை. ரெட்டியார் கவிராயரை நோக்கி,
""தாங்கள் யார்?'' என வினவினார்.
""உலகெல்லாம் புகழ்ந்தோதுதற்கரிய மாம்பழம்'' எனக் கவிராயர் விடை பகர்ந்தார். அதைக் கேட்ட ரெட்டியார்,
""வண்டிருக்கும் பழமா? வண்டில்லாத பழமா?'' என எதிர் வினாத் தொடுத்தார். எதிர்பாராத இவ்வினாவைக் கேட்ட கவிராயர், பதில் சொல்வது எவ்வாறு எனத் திகைத்தார். வண்டிருக்கும் பழம் எனில், அது இறைவனுக்குப் படைக்கவும், மன்னருக்கு அளிப்பதற்கும் ஆகாது. வண்டில்லாத பழமெனில் அதில் சுவையிருக்காது என்பதை அறிந்திருந்த கவிராயர் விடை கூறாமல், ""தாங்கள் யார்?'' என ரெட்டியாரை நோக்கிக் கேட்டார்.
ரெட்டியார் நகைச்சுவை தோன்றத் தனது பெயரை நேரடியாகக் கூறாமல், ""தமைய பர்வதம்'' (தமையன்-அண்ணா, பர்வதம் - மலை) என விடையளித்தார்.
உடனே கவிராயர், ""நீர் பிஞ்சிலே பழுத்த நல்ல பழம்'' எனப் பெருமையுடன் ரெட்டியாரை வாழ்த்தி, அவர் பாடிய காவடிச்சிந்தில் உள்ள சில பாடல்களைக் கேட்டு மகிழ்வுற்றாராம்.

No comments:

Post a Comment