Sunday, March 17, 2013

கலப்புத்தமிழ் பேசுவோர் வந்தால் அச்சமாக இருக்கிறது - அயலகத் தமிழர்கள்

மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு இரண்டு குறைகள். முதலாவது குறை, தாயகத் தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கோ, பாராட்டுகளுக்கோ அயல்நாடு வாழ் தமிழர்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது. இரண்டாவது குறை, தாயகம் வரும்போது தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் எதிலும் தமிழ் நாளிதழ்கள் வழங்கப்படுவதில்லையே என்பது!
இதற்கு முன்பு ஒருமுறை, மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த மலேசிய இந்தியன் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் மோகனும் அவரது மனைவி லோகேஸ்வரியும் இதே ஆதங்கத்தை வெளிப்படுத்தியதைப் பதிவு செய்திருந்தேன். தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலும், சாதாரண லாட்ஜாக இருந்தாலும், ஏதாவது ஆங்கில தினசரிகள்தான் அதிகாலையில் அறைகளில் தரப்படுகின்றனவே தவிர, தமிழ் தினசரிகள் தரப்படுவதில்லை என்பது உண்மைதானே?
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், சக எழுத்தாளர்களுடன் தமிழகத்திற்கு வந்திருந்தபோது, விடுதிகளுக்கு விடுக்கும் முதல் நிபந்தனை எங்களுக்குத் தமிழ் தினசரிதான் தரப்பட வேண்டும் என்பது. ""அப்படித் தமிழ் தினசரி தரமுடியாது என்று சொன்னால் நாங்கள் அந்த விடுதிகளில் தங்குவதில்லை'' என்கிறார் அவர். அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு, தாயகத் தமிழகத்தில் வாழும் நமக்கு இல்லையே என்று நினைக்கும்போது தலைகுனிவாக இருக்கிறது.
இனியாவது நாம் ஏதாவது விடுதிகளுக்குச் சென்று தங்கினால், தமிழ் நாளிதழ்தான் தரவேண்டும் என்று கேட்டுப்பெற வேண்டும். விடுதி அதிபர்களும் தமிழ் நாளிதழ்கள் தங்கள் விடுதிகளில் வைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் நீண்டநாளாக வாழும் தமிழர் ஒருவர் பேசும்போது, "தாயகத் தமிழகத்திலிருந்து யாராவது சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் வருகிறார்கள் என்றாலே பயமாக இருக்கிறது' என்றார். "ஏன்?' என்கிற எனது கேள்விக்கு அவரது பதில் - "நாங்கள் கூடிய மட்டும் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறோம். நீங்கள் இங்கே அதிக அளவில் வரத் தொடங்கியிருப்பது, எங்கள் தமிழைக் கெடுத்துக்கொண்டு வருகிறது!'
சிங்கப்பூர் அரசு "தாய்மொழி மாதம்' என்று தனித்தனியாகச் சீனம், மலாய், தமிழ் மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கிறது. தாய்மொழியில் பேசுவதை வலியுறுத்தியும், ஊக்குவிக்கவும் அந்த மாதத்தில் ஓர் இயக்கமே நடத்தப்படுகிறது. தாய்மொழி அழிந்துவிடலாகாது என்பதற்காக அரசே முனைப்புடன் செயல்படுகிறது. அதையெல்லாம் பார்க்கிறபோது, எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சி. தாயகத் தமிழகத்தில் தமிழ் வழக்கொழிந்து போனாலும்கூட சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் தமிழைக் காப்பாற்றி விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.

No comments:

Post a Comment