Saturday, March 30, 2013

இந்த வார க் கலாரசிகன்

இந்த வார க் கலாரசிகன்

எனக்கும் திருத்தணி பவானி மருத்துவமனை டாக்டர் பி.கே. கேசவராமுக்கும் நட்பு ஏற்படக் காரணமாக இருந்தது, 30 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தயாரித்த "மூக்கணாங்கயிறு' திரைப்படம்தான். அப்போது நான் "சாவி' வார இதழின் உதவி ஆசிரியராக அரசியல், சினிமா என்று எதையும் விடாமல் எழுதித் தள்ளிக்கொண்டிருந்த நேரம். அன்றைய நட்பு இன்று வரை தொடர்கிறது.
இப்போது டாக்டர் கேசவராமைப் பற்றி நான் குறிப்பிடுவதற்கு அவர் அடிக்கடி என்னிடம் எழுப்பும் ஒரு கேள்விதான் காரணம். அவர் அடிக்கடி எழுப்பும் அதே கேள்வியைக் கடிதம் மூலம் நாகர்கோவில் ப.சிவதாணுப் பிள்ளையும் எழுப்பியிருப்பதுவும் காரணம்.
""என்னவெல்லாமோ பெயர் மாற்றம் எல்லாம் செய்கிறார்களே, இன்னும் ஏன் தமிழ்நாடு (பஏஅஙஐழஏ சஅஈம) என்று ஆங்கிலத்தில் எழுதாமல், அதிகாரபூர்வ அரசு ஆவணங்கள் உட்பட "டமில் நாடு' (பஅஙஐக சஅஈம) என்று எழுதுகிறோம்? 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மெட்ராஸ் மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று மாற்றியபோது, ஏன் "டமில் நாடு' என்று ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டார்கள்?'' - இதுதான் டாக்டர் கேசவராம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என்னிடம் கேட்கும் கேள்வி. அதேதான், இப்போது ப.சிவதாணு பிள்ளையும் எழுப்பி இருக்கும் கேள்வி.
தமிழ்நாடு என்கிற பெயரை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். சுதந்திரத்துக்கு முன்பே, அவர்கள் "தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டி' என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பிரிவை அழைத்து வந்தனர். சுதந்திரம் அடைந்தது முதலே, மதராஸ் ராஜதானியைத் தமிழகம் அல்லது தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.
காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது, அவை முன்னவராக இருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்து, ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் தமிழில் "தமிழ்நாடு' என்றும் வழங்கும் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு விட்டிருந்தது. 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான், முதல்வர் சி.என். அண்ணாதுரை அரசுத் தீர்மானமாக முன்மொழிந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்று அதிகாரபூர்வமாகப் புழக்கத்தில் வந்தது.
தமிழ்நாடு என்கிற பெயர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாநிலங்களிலும் கூட அலுவல் காரணமாகப் பயன்படுத்தக் கூடும் என்றும், அவர்களால் தமிழ்நாடு என்று இருந்தால் சரியாக உச்சரிக்கவோ, எழுதவோ முடியாது என்பதால், அப்போது ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்று எழுதாமல் "டமில் நாடு' என்று ஏற்றுக்கொண்டதாக அன்றைய சட்ட அமைச்சராக இருந்து மசோதாவைத் தாக்கல் செய்த செ.மாதவன் கருத்துத் தெரிவிக்கிறார்.
அதெல்லாம் பழைய சம்பவங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. அழகிரி, கனிமொழி போன்ற பெயர்களை எல்லா மாநிலத்தவர்களும் உச்சரிக்க முடியுமானால், இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? தமிழ்நாடு எப்போது அதிகாரப்பூர்வமாகத் "தமிழ் நாடு' என்று அழைக்கப்படப் போகிறது?

======================

புத்தகப் பிரியர்களைச் சந்திக்கப் போகும் போது, நாம் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். அந்தப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருப்பவர் புதுக்கல்லூரிப் பேராசிரியர் ஹாஜாகனி. கடந்த செப்டம்பர் மாதம் என்னை அவர் சந்திக்க வந்தபோது எனக்குப் பரிசளித்த புத்தகம், பேராசிரியர் கா.அப்துல் கஃபூரின் "இலக்கியம் ஈந்த தமிழ்'.
1957-இல், மா.இராசமாணிக்கனாரின் மதிப்புரையுடன் வெளிவந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் குமரிமாவட்டம் திருவிதாங்கோடு நன்னெறி பதிப்பகத்தார். இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல் என்றெல்லாம் போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கஃபூர், தமிழாய் வாழ்ந்த பெருமக்கள் பலரில் ஒருவர். "பேராசிரியருக்கெல்லாம் பேராசிரியர்' என்று அவரது மாணவர் முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சாவால் போற்றப்பட்ட அப்துல் கஃபூர் ஒரு மிகப்பெரிய சாதனையாளர்.
முதுகலையில் தமிழ் பயின்று கல்லூரி முதல்வரான முதல்வர்களில் முதல்வர் அவர். இன்று இலக்கிய மேடைகளில் மேன்மையோடு திகழும் கவியரங்கங்களைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் முதல்வர். மறுபதிப்புக்கு அனுமதியளித்த பேராசிரியருக்கு, அது வெளிவரும்வரை வாழக் கொடுத்து வைக்கவில்லை. கடந்த 2002-ஆம் ஆண்டு அல்லாவுடன் ஐக்கியமாகிவிட்டார்.
பொறுக்கி எடுத்த 11 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஆழ்கடல் முத்து. மதிப்புரை வழங்கி இருக்கும் இராசமாணிக்கனார் குறிப்பிடுவதுபோல, எளிய, இனிய, செந்தமிழ் நடையில், ஒவ்வொரு கட்டுரையும் தமிழ் இலக்கிய மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. "தமிழ் வளர்த்த பண்பாடு' எனும் கட்டுரையில் தொடங்கிப் "புதுப்புனல்' ஈறாக அமைந்துள்ள பதினோரு கட்டுரைகளும், ஒன்றை மற்றொன்று விஞ்சி நிற்கும் தன்மையன. சொற்செறிவும், பொருட் செறிவும் மட்டுமல்ல, ஆற்றொழுக்கு போன்ற நடையழகும், பள்ளி மாணவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளத்தக்க எளிமையும் பேராசிரியர் அப்துல் கஃபூரின் எழுத்தின் தனித்தன்மைகள்.
"ஆசுகவி' பற்றி ஒரு கட்டுரை. ""புலமைச் செல்வம் வாய்க்கப் பெற்ற புலவர்களை, "கவி, கமகன், வாதி, வாக்கி' என இலக்கண நூலார் நான்கு வகையாகப் பிரித்தனர். அதில், ஆசு கவியின் இலக்கணம் என்ன?குறிப்பிட்ட ஓர் எழுத்தையோ, சொல்லையோ, பொருளையோ, யாப்பையோ, அணியையோ கொடுத்து, அதன்படி ஒருவர் பாடச் சொல்லும் போது, அவரெதிரே பாடப்படுவது ஆசு கவியாக அமையும்.
"ஆசு' எனும் சொல் பல பொருள்களில் பயின்றுவரக் காண்கிறோம். ""ஆசா கெந்தை யாண்டுளென்கொல்லோ!'' என்று ஒüவை கூறும்போது, "பற்றுக்கோடு' என்பது பொருள். ""அரியகற்று ஆசற்றோர் கண்ணும்'' என்று வள்ளுவம் கூறும்போது, "குற்றம்' என்பது பொருள். "தேசிகமென்றிவை ஆசின் உணர்ந்து' என்று இளங்கோவடிகள் கூறும்போது, அங்கே "நுட்பம்' என்று பொருளாகிறது.
ஐயம், அற்பம், துன்பம், இலக்கு, கவசம்,
ஆணவ மலம், வாளின் கைப்பிடி, நூலிழைக்குங் கருவி போன்ற பல பொருள்களைக் குறிக்க "ஆசு' என்கிற ஈரெழுத்தொரு சொல் பயன்படுகிறது. அது மட்டுமல்ல, நேரிசை வெண்பாவின் முதற்குறளில் இறுதிச் சீருக்கும் தனிச் சொற்குமிடையில் கூட்டப்படும் அசையினை ஆசென்று வழங்குகிறது காரிகை.
 மேலே குறிப்பிட்ட எதிலிருந்தும் ஆசுகவி என்கிற அந்தப் பெயர் அமையவில்லை. "ஆசு' என்பதற்கு வடமொழியில் "விரைவு' என்று பொருள். விரைவாகச் செல்வதன் காரணமாக, அம்பை "ஆசுகம்' என்றும், வாயுவை "ஆசுகன்' என்றும், பறவையை "ஆசுகி' என்றும் வடமொழியில் அழைத்தனர். அதுபோல, கொடுத்த பொருளை, அடுத்த பொழுதிற் பாடும் புலவனை "ஆசு கவி' என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். "ஆசு கவி' போல, ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புதுச் செய்தியை, ஆய்வை முன் வைக்கிறது. எனக்கு ஒரு சின்ன வருத்தம். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தும், பேராசிரியர் அப்துல் கஃபூர் என்கிற தமிழ்ப் பெருந்தகையை நேரில் சந்திக்காமல் விட்ட மாபாவியாகி விட்டேனே....!

======================

பட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் நடத்தும் சிற்றிதழ், "இலக்கியச் சிறகு'. அதில், திருக்குவளை வெற்றிப் பேரொளி எழுதியிருக்கும் கவிதை "புதை மணல்'.

பெருமணல் சிறுமணல்
பொடி மணல் எல்லாம் போய்
இப்போது பிண மணல்.
அன்று ஆற்றங்கரையோரம்
சுடுகாடு
இன்று சுடுகாட்டில்
ஆறு!

No comments:

Post a Comment