Saturday, April 27, 2013

தாய்மொழி மறவா சௌராட்டிரர்

இந்த வார க் கலா இரசிகன்

குஜராத் மாநிலம் செüராஷ்டிராவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் குடியேறியவர்கள் செüராஷ்டிர இனத்தவர்கள். மாநிலம் மாறிவந்தாலும் தங்கள் தாய்மொழியை மறக்காமல் இருப்பதற்காவே அவர்களைப் பாராட்ட வேண்டும். (வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்கள் செüராஷ்டிர சமுதாயத்தினரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று).
மதுரையிலிருந்து நண்பர் தெட்சிணாமூர்த்தி ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். இன்று காலை பத்து மணிக்கு, மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியில் அமைந்த "கீதா நடன கோபால நாயகி மந்திர்' அரங்கத்தில் "மகாபாரதம்' செüராஷ்டிர மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதுதான் அவர் அனுப்பியிருந்த தகவல்.
"பாண்டவாஸ் கெதொ' (பாண்டவர்களின் கதை) என்கிற புத்தகத்தை எழுதியிருப்பவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் சாதாரண நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த கஸின் ஆனந்தம் என்பவர். செüராஷ்டிர மொழியைப் பயின்றதுடன் நிற்காமல், பலருக்கும் அந்த மொழியைக் கற்பிக்கும் பணியையும் செய்து வருபவர். இவரைப் பற்றிய இன்னொரு சிறப்புத் தகவல், கஸின் ஆனந்தம் செüராஷ்டிர மொழியில் பல சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியிருக்கிறார் என்பதுதான்.
தாய் மொழியை மறவாத அவரை முன்மாதிரியாக நாம் கொள்ள வேண்டும். அவரது தாய்மொழிப் பற்றுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்!
--------------------------
""காதல் சுகம்தான், ஆனால், அதைவிட இதம், குடும்பத்தின் பேரன்பு. காலமெல்லாம் ஊட்டி வளர்த்த உறவுகளை உதறிவிட்டு அடையும்படியான அதிசயம் அல்ல காதல்!''
""பெண்கள் ஆடு-மாடுகள் அல்லர்; அவர்களும் மனிதர்கள்தான்! ஆனால், பெண்கள் தங்களை மனித ஜீவன்களாகக் கருதிக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் அவ்வாறே நடத்தப்படுவார்கள்!''
""புத்தகத்துக்கு நடுவில் வைத்து ரசிக்கும் மயிலிறகு போன்றது அல்ல பதிவுச் சான்றிதழ். சிலவற்றைச் சொல்லாதபோது மரியாதை கிடைக்கும்; சிலவற்றை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் போதுதான் மரியாதை கிடைக்கும். திருமணம் என்பது அப்படி கம்பீரமாக வெளியில் சொல்லி கெüரவப்படுத்திக் கொள்ளும் விஷயம்''
""நீ செத்துட்டியானா இந்தக் குழந்தையோட கதி எப்படி? எனக் குழந்தையைக் காரணம் காட்டி வாழவைத்த காலம் போய், இன்று இப்படி ஒரு பெண்ணிடம் கேட்கவே அச்சமாக இருக்கிறது. குழந்தைக்காக நாம் வாழ வேண்டும் என்கிற வைராக்கியம் வளர வேண்டுவதற்குப் பதிலாக, நமக்கு முன் குழந்தை செத்துப் போனால் யாருக்கும் பிரச்னை இல்லை என்று சொல்லத் துணிவு பிறந்துவிட்டது. கல்வியில் முன்னேறிய பெண்கள், மன உறுதியில் பின்னடைவு பெற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறதே அன்றி வேறு என்ன?''
""இ.பி.கோ. பிரிவு 494, 495, 496 என இன்னும் எத்தனை எண்களை வேண்டுமானாலும் சட்டத்தில் சேர்க்கலாம். எண்ணங்கள் பலப்படாதபோது, எண்களால் என்ன பயன்?''
""வரதட்சணைக் கொடுமை இருந்தால், அதற்குத் தண்டனை வாங்கித் தரும் மனத்துணிவு தேவைதான். ஆனால், பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டபூர்வமான தீர்வை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே அன்றி, பழிவாங்கும் வாளாகப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், அது வீசியவர்களையே கிழித்துவிடும்!''
""ஆயிரம் பாதிக்கப்பட்டோர் அழுத கண்ணீரோடு நீதி கிடைக்காமல் போகலாம்! ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிறது சட்டம். அப்படியானால், நீதி கிடைக்காமல் போவது, சட்டத்தை நம்பியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில்லையா?''
மேலே குறிப்பிட்டிருப்பவை எல்லாம் வழக்குரைஞர் சுமதி "கண்டதைச் சொல்கிறேன்' என்கிற தலைப்பில் எழுதி இருக்கும் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி என்கிற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் மேற்கோள்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சம்பவப் பின்னணி கதையாகத் தரப்பட்டுள்ளது; சுவாரஸ்யமாகவும் தரப்பட்டுள்ளது.
அதைவிடச் சிறப்பு, பல்வேறு சட்டக் கூறுகளையும் அதன் விளக்கங்களையும் ஒவ்வொரு கட்டுரை முடியும்போது, பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருப்பது. "மைனர் திருமணம்', "ஹேபியஸ் கார்ப்பஸ்' எனப்படும் "ஆட்கொணர்வு மனு', "டைவர்ஸ் மற்றும் நல்லிட்டி', "பொய் சொல்லித் திருமணம் செய்து கொள்வது', "ஜீவனாம்சம்', "குடும்பநல நீதிமன்றம்', "வரதட்சணைக் கொடுமை', "திருமணச் சட்டப் பதிவுகள் 494, 495, 496', "குற்றவியல் முறைச் சட்டப்பிரிவு -320' ஆகியவற்றின் விளக்கங்கள் தரப்பட்டிருப்பது பாமரருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
இன்றைய இளைஞர் பற்றியும் திருமண வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், பிரச்னைகள், தீர்வுகள், சட்ட வழிமுறைகள் போன்ற அனைத்தையும் சம்பவக் கதை போல சொல்லிச் செல்லும் பாங்கு, வழக்குரைஞர், பட்டிமன்ற பேச்சாளர் சுமதியை தேர்ந்த எழுத்தாளராகவும் அடையாளம் காட்டுகிறது.
வழக்குரைஞர் சுமதியின் ரெüத்திரம் பழகு, கல் மண்டபம் இரண்டு நூல்களையும் நான் படித்ததில்லை என்பதால், "அட, சுமதி இவ்வளவு நன்றாக, சுவாரஸ்யமாக எழுதுகிறாரே' என்று வியப்படைவதற்கு என்னிடம் கோபப்படக் கூடாது.
"குடும்பங்களில் பிரச்னைகள் வராமல் தடுப்பது எப்படி என்பதற்கும், வந்த பிரச்னைகளை சட்டத்தின் துணையோடு எதிர்கொள்வது எப்படி என்பதற்கும் இந்த உண்மைக் கதைகள் வழிகாட்டும்' என்கிற பதிப்பாளரின் உரை நூற்றுக்கு நூறு உண்மை.
இரண்டு முறை படித்துவிட்டேன். பக்கத்துக்குப் பக்கம் குறிப்பெடுத்தும் விட்டேன்.
"தினமணி' யின் நடுப்பக்கத்தில், வழக்குரைஞர் சுமதி கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். கேட்கத்தான் முடியும்; இதற்கெல்லாமா "ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு போட்டு உரிமை கோர முடியும்?

--------------------------
"டாஸ்மாக்' என்கிற தனது கவிதை வெளிவந்திருந்த "இனிய உதயம்' திங்களிதழை அனுப்பி இருந்தார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி. அந்த இதழில் "கவிவாணன்' எழுதிய "அர்ப்பணிப்பு' என்கிற கவிதையும் வெளியாகி இருந்தது. என் மன உணர்வுகளை அவர் வெளிப்படுத்தி இருப்பதால் எனக்குப் பிடித்திருந்தது.
இமெயில் இண்டர்நெட் செல்பேசி குறுஞ்செய்தி என எல்லாம் நவீனமானாலும் தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும் தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!

No comments:

Post a Comment