Saturday, April 6, 2013

முசுதபாவின் கல்விப்பணி

இந்த வாரம் கலா இரசிகன்


சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் எம்.ஏ. முஸ்தபா. அவரது முஸ்தபா அறக்கட்டளை ஆற்றும் தமிழ்ப் பணி, அங்கே வாழும் தமிழர்கள் அவரை "முஸ்தபா அண்ணன்' என்றும், "தமிழ் நேசர்' என்றும் அழைக்க வைத்திருக்கிறது. கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றிருந்த போது, என்னை வலுக்கட்டாயமாக முஸ்தபா சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
"அடேங்கப்பா...' என்று வாயைப் பிளக்க வைக்கிறது அந்த நூலகம். "எங்க நூலகத்தைப் பார்த்து அமைக்கப்பட்டதுதான் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம்' என்று அந்த நூலகத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் புஷ்பலதா நாயுடு சொன்னபோது, அவரது முகத்தில் பெருமை பிடிபடவில்லை. ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று, தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கினார். கவிஞர் வைரமுத்து சிங்கப்பூர் வந்தால், "என்னைத் தனியே விடுங்கள்' என்று கூறி அந்த நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்து விடுவாராம். நுழைந்தால் வெளியேவரத் தோன்றாது என்பதை நேரில் பார்த்து உணர்ந்தேன். ஒரு நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்றால், சிங்கப்பூர் தேசிய நூலகம் போல் இருக்க வேண்டும்.
முஸ்தபாவின் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கே இன்னொரு இன்ப அதிர்ச்சி. அவரது நாற்காலிக்குப் பின்னால் "தினமணி'யில் வெளியான கட்டுரை பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது.
முஸ்தபா அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். நிறைய புகைப்படங்களைக் காட்டினார். யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எப்படிப் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது என்பது பற்றி விவாதித்தார். மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் தேடிப் பிடித்துத் திரட்டி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முஸ்தபா அறக்கட்டளையின் சார்பில் "தமிழ்வேள்' கோ. சாரங்கபாணியின் பேரில் ஒரு இருக்கை நிறுவப்பட்டு, அந்தப் புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இப்போது, யாழ்ப்பாணம் நூலகத்தையும் பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் முஸ்தபா. பழைய தமிழ் நூல்களைத் திரட்டி யாழ்ப்பாணம் நூலகத்துக்குக் கொடுக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கப்பூரில் கொடிகட்டிப் பறக்கும் முஸ்தபாவுக்கு, தான் பிறந்த முத்துப்பேட்டையை ஒரு சிங்கப்பூராக்க முடியாவிட்டாலும், சிங்கப்பூரில் உள்ளதுபோல ஒரு பள்ளிக்கூடம் நிறுவ வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் அமைத்து, கோடிகளை சம்பாதிக்க வழிதேடும் காலகட்டத்தில், சம்பாதித்த பணத்தைக் கொட்டி, சர்வதேசத் தரத்தில், குறைந்த கட்டணத்தில், தான் பிறந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், நிச்சயமாக அந்த எண்ணத்தைப் போன்ற உயர்ந்த மனிதராகவும் அவர் திகழ்வார் என்பதில் என்ன சந்தேகம்?
சிங்கப்பூர் தரத்தில் முத்துப்பேட்டையில் பள்ளிக்கூடம் நிறுவியிருப்பதுகூடப் பெரிதல்ல. பெண்களுக்கான பள்ளிக்கூடம் நிறுவியிருக்கிறாரே, அது அதனினும் சிறப்பு. 17 ஆண்டுகளுக்கு முன்னால், பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தனது தாயார் ரஹ்மத் அம்மாளால் முத்துப்பேட்டையில் திறந்து வைக்கப்பட்ட அந்தப் பள்ளியில் 1,500 மாணவியர் இப்போது படிக்கிறார்கள். முத்துப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பது என்பது பெருமை.
இந்தப் பள்ளியைத் தொடங்கியதற்கான
காரணத்தை முஸ்தபா கூறியபோது, நான் நெகிழ்ந்து போனேன். அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
""வருஷா வருஷம் விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால், எங்கள் மாவட்டத்தில், குறிப்பாக, முத்துப்பேட்டை பகுதியில் எப்போது, என்ன விபரீதம் நடக்குமோ என்கிற அச்சம் இந்து, முஸ்லிம் இரு தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கி, இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பினரின் பெண் குழந்தைகளையும் ஒன்றாகப் படிக்க வழிகோலிய பிறகு, பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. இப்போது பிரச்னையே இல்லை. நான் எதிர்பார்த்தது நடந்தது!'' என்று பெருமிதத்துடன் கூறினார் முஸ்தபா.
ஊருக்கு ஒரு முஸ்தபா தோன்றினால் என்ன என்று என் உள் மனதில் ஏக்கம் பிறக்கிறது!
*  *  *  *
எத்தனை எத்தனையோ எழுத்தாளர்கள் வந்துவிட்டனர். நானும் நாள்தோறும் பல சிறுகதைகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், தமிழ்ச் சிறுகதைகளின் பொற்காலம் கடந்த நூற்றாண்டுடன் முடிந்துவிட்டது என்பது எனது கருத்து. அதற்குக் காரணம், அந்தக் கதைகள் வாசகனைக் கதையுடன் ஒன்ற
வைத்தன. அவனது மென்மையான உணர்வுகளைத் தொட்டு, உணர்ச்சிகளைத் தூண்டின.
இன்றைய தன்னுணர்வுச் சிறுகதைகளில் பல கட்டுரைகளாகத் தோற்றமளிப்பதற்குக் காரணம், அவை ஜனரஞ்சகத்திலிருந்து விடுபட்டு, ஒரு தனிமனித எண்ண ஓட்டத்தை மட்டுமே பிரதிபலிப்பதுதான். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும், பிரதிபலிக்கும் சம்பவங்கள் மற்றும் பிரச்னைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அன்றைய கதைகளில் இருந்த ஈர்ப்பு, இன்றைய பெருவாரியான சிறுகதைகளில் காணப்படுவதில்லை. அதற்காக, நான் எல்லா சிறுகதைகளும் அப்படி என்று சொல்ல வரவில்லை.
சமீபத்தில், தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பான "சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என்கிற புத்தகத்தைப் படித்தேன். படிக்கத் தொடங்கியபோது மணி இரவு (அதிகாலை ?) இரண்டு. முடித்தபோது பொழுது புலர எத்தனித்துக் கொண்டிருந்தது. சென்னையில்தான் சேவல் கூவாதே. காக்காக்களின் சலசலப்பு கேட்கத் தொடங்கி இருந்தது.
ஒவ்வொரு சிறுகதையும், ஒன்றை மற்றொன்று விஞ்சுவதாக இருந்தது. ஒவ்வொரு கதையிலும் ஒரு செய்தி இருந்தது; சமுதாயப் பிரச்னை இருந்தது; கதையும் இருந்தது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு குறிப்பிட்டிருப்பது, அந்தக் கதை பிறந்த காலத்தையும், அந்தக் கதையை எழுதத் தூண்டிய சமுதாய அரசியல் சூழ்நிலையையும் உணர்ந்தறிந்து சொல்வதற்குத்தான் என்று ரகுநாதன் குறிப்பிட்டிருப்பது உண்மை.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ள கதைகளில் பல ரஷ்ய மொழியில் மட்டுமன்றி, செக், ஹங்கேரி, போலிஷ், இந்தி முதலிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவையாம். முதன் முதலில் ஐரோப்பிய மொழி ஒன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட தமிழ் நாவல் தொ.மு.சி. ரகுநாதனின் "பஞ்சும் பசியும்'தான், தெரியுமா?
"ஐந்து ஏக்கர் நிலம்' என்றொரு கதை. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய தியாகி சங்கரன், சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்குத் தரப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் கதை. தந்தை அருணாசலம் பிள்ளைக்கும், மகன் சங்கரனுக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதங்களை, இன்றைய அரசியல்வாதிகளுக்குப் படித்துக் காட்ட வேண்டும். அப்போதாவது அவர்களுக்குத் தியாகம், தேசப்பற்று, பொது வாழ்க்கையின் நோக்கம் பற்றிய உணர்வு ஏற்படாதா என்கிற நைப்பாசைதான் காரணம்.
*  *  *  *
எனது டைரியில் குறித்து வைத்திருந்த கவிதை இது. எழுதியவர் பெயர் மேஹாஷ். எப்போதோ ஆனந்த விகடனில் படித்த கவிதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சாலைகளில், ஓட்டல் வாசல்களில்
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!

No comments:

Post a Comment