Saturday, April 6, 2013

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

First Published : 07 April 2013 12:37 AM IST

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.
திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.
 குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து...

No comments:

Post a Comment